Oct 23, 2018

ஆற்றலைப் பெறு


ஆற்றலைப் பெறு 


                  யாருடைய வாழ்கையில்தான் துன்பமும் துயரமும் இல்லை? அவை இருக்கவே செய்யும். அவருடைய திருநாமத்தைச் சொல். அவரைச் சரணடைந்து வாழ். அப்பொழுது அவர் ஆற்றலைத் தருவார். கஷ்டமோ பிரச்சனைகளோ ஏதும் அப்பொழுது உன்னை அலைக்கழிக்க முடியாது. 

-  அன்னை சாரதாதேவி 

கெடுவாய் மனனே, கதிகேள், கரவாது
இடுவாய், வடிவேல் இறைதாள் நினைவாய்,
சுடுவாய் நெடுவே தனைதூள் படவே,
விடுவாய், விடுவாய், வினை யாவையுமே.     
- கந்தரனுபூதி , 7


                      கெடு வழியிலே செல்லுகின்ற மனமே! நல் வழியைக் கூறுகின்றேன், கேட்பாயாக! உன்னிடம் உள்ளதை மறைக்காமல் பிறருக்குத் தானமாகக் கொடுத்து மகிழ்ந்து, கூர்மையான வேலினைத் தாங்கிய இறைவன் திருமுருகப்பெருமானின் திருவடிகளை நினைந்து தியானம் செய்து வருவாயாக. அப்படிச் செய்தால் நீண்ட காலமாகப் பிறவியிலே அகப்பட்டு நீ அனுபவித்து வருகின்ற துன்பங்கள் எல்லாம் சுட்டு எரிக்கப்படும். பிறவிக்கும், அதனால் வரும் துன்பத்திற்கும் காரணமான வினைகள் எல்லாம் உன்னை விட்டு நீங்கும். 

Oct 22, 2018

அங்கே இல்லை ; இங்கே

அங்கே இல்லை ; இங்கே 

                           இறைவன் அங்கே, அங்கே என்ற உணர்வு இருக்கும் வரையில் அஞ்ஞானம் உள்ளது ; இங்கே , இங்கே என்ற உணர்வு வந்தால் ஞானம் வந்துவிட்டது. 


- பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் 


அங்கத்தை மண்ணுக்காக்கி 
ஆர்வத்தை உனக்கே தந்து
பங்கத்தை போக மாற்றிப் 
பாவித்தேன் பரமா நின்னை
சங்கொத்த மேனிச் செல்வா 
சாதல்நாள் நாயேன் உன்னை
எங்குற்றாய் என்ற போது 
இங்குற்றேன் என் கண்டாய்


-திருநாவுக்கரசர் தேவராம்    4.75.8

                                   நிலையற்ற இந்த உடலை மண்ணுக்கு தந்தேன். என் பக்தியையும் ஆர்வத்தையும் உனக்கே அளித்தேன். இந்த உலகின் மீது நான் கொண்ட பற்றை நீக்கி உன்னையே பற்றிக் கொண்டேன். சங்கு போன்ற வெண்மேனிச் செல்வமே!! எம் இறைவா! உன்னையே விசுவாசிக்கின்ற நாயனே ஆகிய நான், சாகும் போது எங்கே சென்றாய் எம் இறைவா என்று உன்னை அழைப்பேன். அப்போது “இதோ வந்தேன்!” என்று என்னை அணுகி அருளல் வேண்டும்.

மூன்று பதுமைகள்

மூன்று பதுமைகள் 


உப்பு, துணி, கல் போன்றவற்றால் செய்யப்பட்ட மூன்று வகை பதுமைகள் உள்ளன. அவைகளைத் தண்ணீரில் போட்டால், முதலாவது பதுமை கரைந்து தன் உருவத்தை இழந்து விடும். இரண்டாவது பதுமை தன் உருவம் மாறாமல் நிறைய தண்ணீரைத் தன்ளுள் இழுத்துக்கொள்ளும். மூன்றாவது பதுமையிலோ தண்ணீரே நுழைய முடியாது.


இதில் கூறப்பட்ட,
முதலாவது பதுமை பரமாத்மாவிடம் சேர்ந்து அதனோடு இணைந்து ஐக்கியமாகி விடும்.
இரண்டாவது பதுமை தன் உருவம் மாறாமல் ஏராளமான தண்ணீரைத் தன்னுள் கிரகித்துக் கொள்ளும்.
மூன்றாவது பதுமையிலோ தண்ணீரே நுழைய முடியாது. பரமாத்மா விடம் சேர்ந்து விடும்.


முதலாவது பதுமை மனிதனைக் குறிக்கும். இரண்டாவது வகை பதுமை உண்மையான பக்தனைக் குறிக்கும். மூன்றாவது வகை பதுமை கொஞ்சம் கூட ஞானம் நுழையாத இருதயத்தை உடைய உலகப் பற்றுள்ளவனைக் குறிக்கும்.