பிரத்யாஹாரம்
வழக்கமாக நாம் விஷயப் பொருள்களின் மீது நம் மனம் அனிச்சையாக ஒருமுகப்படும் நிலையில் இருக்கிறோம். விஷயப் பொருள்களில் உள்ள கவர்ச்சி நமது மனத்தை வலுக்கட்டாயமாக அதன்மீது ஒருமுகப் படச் செய்கிறது இதனால் நாம் அப்பொருள்களுக்கு அடிமைகள் ஆகிவிடுகிறோம். ஆனால் உண்மையில் நாம் நமது சங்கல்பத்திற்கோ, விருப்பத்திற்கோ ஏற்றவாறு மனத்தை விஷயங்களின் மீது செலுத்தவோ அல்லது அதிலிருந்து பிரித்துக் கொள்ளவோ முடிந்தவர்களாக இருக்க வேண்டும். விஷயங்கள் நம் மனத்தைக் கட்டாயப்படுத்திக் கவர்ந்து செல்லக் கூடாது, இந்தப் பயிற்சிதான் மனக் கட்டுப்பாட்டில் மிக முக்கியமான ஒரு படியாகும். இதனைக் கற்றுக் கொள்ளும் வரை நடைமுறை ரீதியாக மனக்கட்டுப் பாட்டில் நாம் எதையும் அடைய முடியாது.
இதனை எப்படிச் செய்வது ? சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்:
'நல்லவனாக இரு', 'நல்லவனாக இரு', 'நல்லவனாக இரு', என்று திரும்பத் திரும்ப உலகெங்கும் புகட்டப்படுவதைக் கேட்கிறோம். 'திருடாதே, பொய் சொல்லாதே' என்று அறிவுறுத்தப்படாத ஒரு குழந்தை கூட உலகின் எந்த நாட்டிலும் இருக்க முடியாது. ஆனால் அப்படிச் செய்யாமல் இருப்பது எப்படி என்பதை யாரும் அவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை. வெறும் வாய்ப் பேச்சினால் அவனுக்குப் பயணில்லை . அவன் ஏன் திருடனாகக் கூடாது? திருடாமல் இருப்பது எப்படி என்று அவனுக்கு நாம் கற்றுக் கொடுப்பதில்லை. 'திருடாதே' என்று மட்டும் அவனிடம் வெறுமனே சொல்கிறோம். மனத்தை அடக்கியாளக் கற்றுக் கொடுக்கும்போதுதான் உண்மை யில் அவனுக்கு உதவுகிறோம்.
பொறிகள் எனப்படுகின்ற சில குறிப்பிட்ட மையங்களுடன் மனம் தன்னை இணைத்துக் கொள்ளும் போதுதான் அக மற்றும் புறச் செயல்கள் எல்லாமே நிகழ்கின்றன. மனம் உடன்பட்டாலும் சரி, உடன்படாவிட்டாலும் சரி, இந்த மையங்களுடன் இணைவதற்காகவே இழுக்கப்படுகிறது. இதனால்தான் மக்கள் முட்டாள்தனமான காரியங்களைச் செய்து விட்டுப் பின்னால் துன்பப்படுகிறார்கள். மனம் மட்டும் அவர்கள் வசம் இருந்திருந்தால், அவற்றை அவர்கள் செய்திருக்கவே மாட்டார்கள். மனத்தை அடக்குவதால் ஏற்படும் பலன் என்ன? அது பொறிகளோடு சேர்ந்து கொள்ளாது இருக்கும் பொழுது எண்ணங்களும் செயல்களும் இயல்பாகவே கட்டுப்பாட்டில் இருக்கும் இதுவரை புரிகிறது. ஆனால், அது முடியக் கூடியதா? ஆம் கண்டிப்பாக முடியும்.
பதஞ்சலி முனிவர்கூறியுள்ள பிரத்யாஹாரத்தைப் பயிற்சி செய்வதின் மூலம் இதைச் செய்ய முடியும். பிரத்யாஹாரம் என்ன ? தத்தம் விஷயங்களை விட்டுவிட்டு புலன்கள் அடங்கிய சித்தத்தின் உருவத்தை அடைவது போல தோன்றுவது பிரத்யாஹாரம்.
"விஷயப் பொருள்களிலிருந்து மனத்தை விலக்கி கொண்டால் புலன்களும் விஷயங்களிலிருந்து விலகிக் கொள்கிறது. இது பிரத்யாஹாரம் எனப்படுகிறது."
விஷயப் பொருள்களையும் புலன்களையும் இணைக்கும் கருவி மனமேயாகும். மனத்தை விஷயப் பொருள்களிலிருந்து விலக்கிக் கொண்டால் புலன்களும் மனத்தைப் பின்பற்றி விஷயப் பொருள்களி லிருந்து விலகிக் கொள்கின்றன. மனத்தைக் கட்டுப் படுத்தி விட்டால் புலன்களும் தானாகவே கட்டுப் படுத்தப் படுகிறது. உதாரணமாகத் தேனீக்களை எடுத்துக் கொள்வோம்.
" இராணித் தேனீ பறக்கும் வரை மற்ற தேனீக்களும் பறந்து செல்கிறது. இராணித் தேனீ பறப்பது நின்று விட்டால் மற்ற தேனீக்களும் நின்று விடுகின்றன. இதைப் போலவே மனம் அலை பாய்வது நின்று விட்டால் புலன்களும் அடங்கி விடுகின்றன. இதுவே பிரத்யாஹாரம் எனப்படுகிறது."
பிரத்யாஹாரத்தின் முழு ரகசியமுமே, ஒவ்வொரு சாதாரண மனிதனும் வளர்த்துக் கொள்ளக் கூடிய மனவாற்றலில் உள்ளது. ஆனால் பலரிடம் இந்தச்த்தியானது வளர்ச்சியடையாமல் உள்ளது. பிரத்யாஹாரத்தில் ஒருவன் தேர்ச்சியடைந்து விட்டால் அவன் தன்னுடைய புலன்களையும், எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் அடக்கியாளும் திறமை படைத்தவனாக ஆகி விடுகிறான். பிரத்யாஹாரத்தினால் ஒருவனுக்கு மனவாற்றலும், மனவாற்றலால் பிரத்யாஹாரமும் வளர்கின்றது. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.